60 லட்சம் எஸ்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்தியது மத்திய அரசு?...14 மாநிலங்களில் தவிப்பு

புதுடெல்லி: எஸ்சி மாணவர்கள் 60 லட்சம் பேருக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  ஒவ்வொரு மாநிலங்களிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் எஸ்சி மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த நிலையில், திடீரென மத்திய அரசு இதை நிறுத்தி உள்ளது. இதன் காரணமாக 14 மாநிலங்களை சேர்ந்த 60 லட்சம் எஸ்சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டாகவே இந்த கல்வி உதவித்தொகை பிரச்னை மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் இந்த விவகாரம் பிரதமர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரதமர் மோடியுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.  நவம்பர் தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில், சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த சீனியர் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 100 சதவீத மத்திய அரசின் உதவித்தொகையை பெறுவார்கள் என்றும், எஸ்டி மாணவர்கள் 75 சதவீத கல்வி உதவித்தொகையை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12ம் வகுப்பு எஸ்சி மாணவர்கள் ஆண்டுக்கு 18 ஆயிரம் உதவித்தொகையை பெற்று வந்தனர்.

மத்திய அரசு மட்டுமின்றி, மாநிலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக இந்த திட்டத்தை நிறுத்தத் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக கடந்த 2017-2020ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநில நிதிக்கொள்கையான 60:40 என்ற கொள்கையை பின்பற்றாத மத்திய அரசின் ஒரே கல்வி உதவித்தொகை திட்டம் இது மட்டுமே. இதனை மத்திய அரசு நிறுத்தியுள்ளது பல்வேறு மாநிலங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. பஞ்சாப், அரியானா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள்  இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் கொண்டு சென்றுள்ளன.

Related Stories:

>