×

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி பராமரிப்பில் அரசு அலட்சியம் காட்டுவதா?...திமுக கடும் கண்டனம்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘நிவர்’ புயலை முன்னிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரை வெளியேற்ற, திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3வது மதகுகள், மூடமுடியாமல் இப்போது 400 கன அடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் மதகு பராமரிப்பில் இப்படி கோட்டை விட்டார்? ஏரி மதகுகளைக் கூட பராமரிக்கும் நிர்வாகத் திறமை இன்றி-முதல்வராக இருந்து இந்தத் தமிழ்நாட்டை இப்படிப் பாழ்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் இந்த அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உள்ள ஏரி மதகுகளைப் பராமரிப்பதற்கென்றே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதன்படி அந்தப் பணிகள் நடப்பதில்லை என்பதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளின் நிலையே சாட்சி.

தலைநகர் சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரியைப் பராமரிப்பதிலேயே இவ்வளவு அலட்சியம் என்றால், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருக்கும் ஏரிகளை இவர்கள் எந்த மாதிரிப் பராமரித்திருப்பார்கள்? “கமிஷன்” மட்டுமே கண்கண்ட தெய்வம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறாரா?. 2015 பெருவெள்ளத்தின் போதும் திடீரென்று 30 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டு சென்னையை வெள்ளக்காடாக்கி-மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டது அதிமுக அரசு. அப்போதும் செம்பரம்பாக்கம் மதகு பிரச்னை இது மாதிரி வெடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படியொரு அவல நிலைமை இப்போதும் செம்பரம்பாக்கம் ஏரியில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ளது.

ஒரு குடம் தண்ணீருக்குத் திண்டாடிய மக்கள் இந்த மழையால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ள நிலையில்-சென்னை மக்களை மீண்டும் குடிநீருக்குத் திண்டாட வைக்கும் வகையில் 400 கன அடி நீர் வீணாகும் அவலநிலையை அதிமுக அரசு உருவாக்கியிருப்பது கண்டனத்திற்குரியது. எனவே, துறை அமைச்சர் என்ற முறையிலும், முதல்வர் என்ற முறையிலும் உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில், மதகுகளைச் சீரமைத்து மூட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags : government ,Sembarambakkam Lake ,DMK ,Chennai , Is the government showing negligence in the maintenance of Sembarambakkam Lake which is the source of drinking water for Chennai? ... DMK strongly condemned
× RELATED நெடுஞ்சாலை பராமரிப்பு தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும்