திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா; 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது: பக்தர்களுக்கு தடையால் நகரம் வெறிச்சோடியது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் நிறைவாக நேற்று மகாதீப பெருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை 2.30 மணி முதல் 3.45 மணிவரை அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு பரணி அபிஷேகம் நடந்தது. பின்னர் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, மகாதீப பெருவிழா மாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ெதாடங்கியது. பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் காட்சியளித்தனர்.

பின்னர், உமையாளுக்கு இடபாகம் வழங்கிய அண்ணாமலையார், ஆண்டுக்கு ஒருமுறை காட்சி தரும் ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.50 மணியளவில் கோயில் தங்க கொடிமரம் முன்பு சில நிமிடம் மட்டும் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணியளவில் தங்கக் கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றப்பட்டதும், சிவனின் திருவடிவமாக காட்சிதரும் 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில், ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டனர். பாரம்பரிய வழக்கப்படி பருவதராஜ குலத்தினர், மகாதீபம் ஏற்றினர். அகந்தையை அழித்து, அருள்ஒளி பெருக்கும் அண்ணாமலையார், அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக மலை உச்சியில் காட்சியளித்தார். தொடர்ந்து, கோயில் அனைத்து பிரகாரங்களும் தீபஒளியால் ஜொலித்தது. மகாதீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் தீபத்திருவிழாவை தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வது வழக்கம். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு, வெளியூர்களில் இருந்து வருவோர் நகரில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனால், அனைத்து சாலைகளும், வீதிகளும் வெறிச்சோடின. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் கிரிவலப்பாதை நேற்று பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

>