தொழில் துறையினர் விரும்பும் கனவுகளை செயல்படுத்தி மக்களின் தேவைகளை செய்து தரும் அரசாக திமுக ஆட்சி இருக்கும்: திருப்பூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: “அமையவிருக்கும் திமுக அரசு,  தொழில் துறையினர் விரும்பும் கனவுகளைச் செயல்படுத்தி, மக்களுக்கு எது தேவையோ அதனைச் செய்து தரும் அரசாக இருக்கும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’-2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் நேற்று காணொலி வாயிலாகத் தலைமையேற்று  பேசியதாவது: தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கின்ற மாவட்டமாகத் திருப்பூர் மாவட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த பத்தாண்டுக்காலமாக, அதிலும் குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டாகப் பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், சிறுகுறு நிறுவனங்களாக இருந்தாலும் அவை செயல்பட முடியாமல் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி வருகிறது. அதற்கு மத்திய பாஜ அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசும் தான் முழுமுதற் காரணம்.

இந்த மண்டலத்தைச் சேர்ந்த வேலுமணியும், தங்கமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாகச் சம்பாதிப்பதில் போட்டி போடுகிறார்களே தவிர, மக்கள் பணிகளைச் செய்யவில்லை. மூத்த அமைச்சரான செங்கோட்டையனுக்கு பள்ளிக் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அவர் அமைச்சர் தானா அல்லது அமைச்சர் மாதிரியா என்பது தெரியவில்லை.  செங்கோட்டையனிடம் கை கட்டி நின்றவர் பழனிசாமி என்பதற்காக இப்படியா பழிவாங்குவது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், என்ன நிலைமையில் இருந்தவர், இப்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்பது அவரது கட்சிக்காரர்களுக்கே தெரியும். இன்னொரு அமைச்சர் கருப்பண்ணன்.  இவர்கள் எந்த நன்மையையும் இந்த மண்டலத்துக்கு செய்யவில்லை. தொழிலாளர்கள் நிம்மதியாக இல்லை, சிறு குறு நிறுவனங்களும் நிம்மதியாக இல்லை ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கின்றன-இதுதான் மோடியின் பொருளாதாரப் பாதை!. இந்த பின்னடைவைச் சரி செய்ய வேண்டாமா? இதில் இருந்து மீள வேண்டாமா? அதற்காகத்தான் தமிழகம் மீட்போம் என்ற முழக்கத்தை முன்னெடுத்து இருக்கிறோம். இந்தியைக் காரணம் காட்டி, தமிழ் இளைஞர்களின் வேலை உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதை எல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி அரசு முதுகெலும்பு இல்லாத அரசாக இருக்கிறது.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்று கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. நாட்டுப் பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை. நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திமுக. அனைத்துத் தரப்பினரும் மனநிம்மதியுடன் தொழில் செய்யும் சூழலை திமுக ஆட்சி ஏற்படுத்திக் கொடுக்கும். ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அவர்களது ஆலோசனைகளைச் செயல்படுத்தும் ஆட்சியாக இருக்கும். தொழிலாளர்களது கண்ணீர் துடைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடப்பதைப் போல, தொழில் நிறுவனங்களுக்கும் அரசுக்குமான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொய்வில்லாமல் நடத்தப்படும். தொழில் துறையினர் விரும்பும் கனவுகளைச் செயல்படுத்திக் காட்டும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமையும். தங்களுக்கு எது லாபமோ அதனைச் செய்து கொள்ளும் அரசாக அதிமுக அரசு இருக்கிறது. மக்களுக்கு எது தேவையோ அதனைச் செய்து தரும் அரசாக திமுக அரசு இருக்கும். அத்தகைய அரசு அமையப் பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: