காற்றில் பறக்கும் கமிஷனர் உத்தரவு ஓய்வு பெற்றவர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கல்: அறநிலையத்துறையில் சர்ச்சை

சென்னை: சென்னை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இங்குள்ள கோயில்கள் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் அறநிலையத்துறைக்கு வருவாய் வருகிறது. இக்கோயில்களில் காலி பணியிடங்களை நிரப்ப போதிய நடவடிக்கை எடுக்காத நிலையில் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 40 பேர் உட்பட சென்னை மண்டலத்தில் உள்ள கோயில்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பணியாளர்களால் தான் கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் சுவாமி கோயிலில் ஓய்வு பெற்ற பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். சவுகார்பேட்டையில் உள்ள  வரதராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு காரணங்களை கூறி, பணியில் இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, அங்குள்ள தனக்கு வேண்டப்பட்டவர்களையும், ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரதராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் பதவிக்கு தன்னிச்சையாக தக்கார் தீர்மானம் பெறாமலும், ஆணையரின் அனுமதி பெறாமலும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அங்கிருந்த நிரந்தர மடப்பள்ளி பணியாளர் மீது பல்வேறு புகார்களை கூறி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு கோயில்களில் பணியாளர்களை நியமிக்கும் போது அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இக்கோயில்களில் அது போன்று ஒப்புதல் பெறுவதில்லை. குறிப்பாக, திருமேணியம்மன் கோயில், முகப்பேர் சந்தான சீனிவாச பெருமாள் கோயில் முறைகேடாக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரு கோயில்களில் அதே பணியாளர்களே சட்டத்திற்கு புறம்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: