கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிச.4ல் சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி ஆய்வு: மதுரையில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். தற்போது வரை 31 மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து 4ம் தேதி முதல்வர் எடப்பாடி மதுரைக்கு செல்கிறார். அங்கு, மதுரை மாநகர் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் முல்லைப்பெரியாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது அவர் கொரோனாவுக்கு எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிற திட்டப்பணிகள் குறித்தும் கேட்டறிகிறார். தொடர்ந்து அவர் சிவகங்கை மாவட்டத்துக்கான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ஏற்கனவே, நடந்து முடிந்த பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.

Related Stories: