போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுக்கு புதிய நிபந்தனை: டெல்லியில் 4ம் நாளாக போராட்டம்

புதுடெல்லி: வேளாண் சட்டத்தை எதிர்த்து 4வது நாளாக போராடும் விவசாயிகள், ‘புராரி மைதானத்திற்கு இடமாற்றம் செய்ய முயற்சித்தால், டெல்லியின் அனைத்து எல்லையையும் முற்றுகையிடுவோம்’ என மத்திய அரசை எச்சரித்துள்ளனர். மேலும், நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தையை ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறி உள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ என்ற பெயரில்  டெல்லி நோக்கி பேரணிக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. பஞ்சாப்பில் இருந்து சுமார் 30 விவசாய சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இப்பேரணியில் பங்கேற்றனர்.

அவர்களுடன் அரியானா மாநில விவசாயிகளும் இணைந்தனர். டெல்லி எல்லையில் இவர்களை தடுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனாலும் முடியாததால், டெல்லியில் நுழைய அனுமதி அளித்தனர். புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த மத்திய அரசு இடம் ஒதுக்கியது. அங்கு ஒரு சில விவசாயிகள் சென்ற நிலையில், பெரும்பாலானோர் டெல்லியின் எல்லையிலேயே முகாமிட்டுள்ளனர். சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் கடந்த 3 நாட்களாக இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் இணையத் தொடங்கி உள்ளனர். இதனால், டெல்லி எல்லை ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ளதால், அந்த இடம் பதற்றமாக காணப்படுகிறது.

விவசாயிகள் போராட்டம் 4வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அரசு ஒதுக்கிய புராரி மைதானத்திற்கு விவசாயிகள் வந்தால், வரும் 3ம் தேதி அவர்களுடன் அரசின் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்த நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.  இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் சுர்ஜித் பால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசின் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்து விவசாய விளைபொருட்களின் விலையை நசுக்கி விடும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அரசும், அதிகாரிகளும் எங்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்.

புராரி மைதானம் ஒரு திறந்தவெளி ஜெயில். அதைப் பற்றி ஆதாரப்பூர்வ தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. எக்காரணம் கொண்டு புராரி மைதானத்திற்கு நாங்கள் செல்ல மாட்டோம். ராம் லீலா அல்லது ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்த தயார். ஏற்கனவே, உத்தரகாண்ட் விவசாயிகளை ஜந்தர் மந்தர் பகுதிக்கு அழைத்து செல்வதாக கூறி டெல்லி போலீசார் புராரி மைதானத்தில் வைத்து அடைத்துள்ளனர். எனவே, எங்கள் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தால் டெல்லியின் 5 எல்லைப் பகுதியையும் முற்றுகையிட்டு யாரும் தலைநகரில் நுழையவும், வெளியேறவும் முடியாமல் தடுப்போம். எங்களிடம் 4 மாதத்திற்கான உணவுப் பொருட்கள் கைவசம் உள்ளன. அதனால், எந்த பிரச்னையும் இல்லை. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தையை ஏற்க முடியாது. எங்கள் போராட்டம் தொடரும். புராரிக்கு இடமாற்றம் செய்வது உள்ளிட்ட எந்த நிபந்தனையும் அரசு விதிக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார். திக்ரி எல்லை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து டெல்லி செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.

Related Stories:

>