கொரோனாவின் பிறப்பிடம் இந்தியா: சீன விஞ்ஞானிகள் பகீர் தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரசின் பிறப்பிடம் இந்தியா என்று சீன விஞ்ஞானிகள் கருத்து கூறியிருப்பது சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் வூகானில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து வெளியானதாக உலகமே கூறி வரும் நிலையில், தற்போது சீன விஞ்ஞானிகள் இந்தியாவில் கொரோனா வைரஸ் உருவானதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக சீன விஞ்ஞானிகள் (சீன அகாடமி) அளித்த பேட்டியில், ‘2019 ஜூலை - ஆகஸ்ட் மாதம் வாக்கில் இந்தியாவில் கொரோனா வைரஸ் உருவானது.

அந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் தாங்கமுடியாத வெப்ப அலையானது, விலங்குகளையும் மனிதர்களையும் தாக்கியது. அப்போது நீர் ஆதாரங்கள் மூலம் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளது. சீன விஞ்ஞானிகளின் இந்த கருத்துகள் சர்வதேச அறிவியல் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கிடையே கிளாஸ்கோ பல்கலைக் கழக நிபுணர் டேவிட் ராபர்ட்சன் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் குறித்து சீன விஞ்ஞானிகளின் புரிதல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அவர்களின் அணுகுமுறை இயல்பாகவே மற்றவர்களை சாடுவதை நோக்கமாக கொண்டுள்ளது’ என்றார்.

Related Stories: