ஐதராபாத் நகரின் பெயரை மாற்றுவோம் என்பதா?.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு சந்திரசேகர ராவ் கண்டனம்

ஐதராபாத்: தனி நபர் வருவமானத்தில் 28-வது இடத்தில் இருக்கும் உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர்,  5-வது இடத்தில் இருக்கும் தெலுங்கானாவுக்கு பாடம் நடத்த முயற்சிக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சாடியுள்ளார். தெலங்கானா மாநிலம் கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வரும் டிச. 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக இடையில்தான் கடும்போட்டி நிலவுகிறது. ஐதராபாத்தில் முஸ்லிம் வாக்குகளும் அதிகம் உள்ளதால், ஒவைசி-யின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் களத்தில் உள்ளது.

இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஐதராபாத்தில் பெயரை பாக்யநகர் என ஏன் மாற்ற கூடாது என கேள்வி எழுப்பினார். தற்போது ஐதராபாத் புதிய நிஜாம்களிடம் உள்ளதாகவும், விரைவில் அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் ஆதித்யநாத் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் அமைதியை குறைக்க சில பிரவுவாத சக்திகள் புகுந்துள்ளதாக குற்றம் சாடினார்.

கலவரத்தை தூண்டும் அவர்களின் முயற்சியை அனுமதிக்க போகிறோமா? அல்லது முறியடிக்க போகிறோமா? என்று அவர் வினவினார். பிளவுவாத சக்திகளிடம் இருந்து ஐதராபாத்தை பாதுகாப்போம் என்றும் அவர் கூறினார். யோகி ஆதித்யநாத்தின் பெயர் மாற்றம் குறித்த பேச்சுக்கு பதிலளித்த சந்திரசேகர ராவ், தனி நபர் வருமானத்தில் 28-வது இடத்தில் இருக்கும் மாநிலம் 5-வது இடத்தில் இருக்கும் தெலுங்கானாவுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்றார். ஒரு மாநகராட்சி தேர்தலுக்கு பாஜக தலைவர்கள் அனைவரும் பரப்புரைக்கு வருவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Related Stories: