எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம்: டுவிட்டரில் ராகுல் காந்தி தாக்கு.!!!

டெல்லி: எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் சமூகத்தில் முன்னேற்றம்  அடைவதற்காக, அவர்களுடைய குழந்தைகளின் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்கு, கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு சார்பிலும் சில திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு  வருகின்றன. குறிப்பாக கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்காக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு, கல்வி உதவித் திட்டத்தை அறிமுகம் செய்து அதற்கான  வழிகாட்டுதலையும் வெளியிட்டது.

அந்த வழிகாட்டுதலின் படி, இன்றளவும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பலர் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இதுபோன்ற கல்வி உதவித் தொகையை நம்பி  உயர் கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை திடீரென மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, இந்தியாவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே  பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் முதன்மை நோக்கமாக உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நிறுத்துவது அவர்களின் கல்விக்கு முடிவு கட்டுவதற்கான வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>