தமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரியையும் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்ட 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் எம்பிபிஎஸ் கலந்தாய்வில் சேர்க்கக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. மதுரை, மாடக்குளத்தைச் சேர்ந்த வாசுதேவா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், திருவள்ளூர், அரியலூர், கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் 2020-21ம் கல்வி ஆண்டிலேயே சேர்க்கப்படும் என தமிழக அரசு கடந்த மாதமே கூறியிருந்தது.

தற்போது 2020-21ம் ஆண்டிற்கான கலந்தாய்வு துவங்கியுள்ளது. ஆனால், கலந்தாய்விற்கான பட்டியலில் புதிய மருத்துவக்கல்லூரிகள் சேர்க்கப்படவில்லை. இது ஏற்புடையதல்ல. தற்போதைய கலந்தாய்வில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகளையும் சேர்த்தால் மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிப்பதுடன், அதிக சீட்கள் கிடைக்கும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூடுதலாக பயனடைவர். நிவர் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே 2020-21ம் ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ கலந்தாய்வில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளையும் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: