×

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில் முதல்வரிடம் அறிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி: பள்ளிகளில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து முதல்வரிடம் 4 நாளில் அறிக்கை அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே குருமந்தூரில் பயனாளிகளுக்கு நேற்று நலத்திட்ட உதவிகளை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் குறித்து எதுவும் எனக்கு தெரியாது. நீங்கள்தான் கூறுகிறீர்கள். நான் அப்படி எதையும் கூறவில்லை. பாடத்திட்டம் குறைப்பு குறித்து அரசாணை வெளியாகாத நிலையில், அனைத்து பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நான்கு நாட்களில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த அறிக்கை முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் ஆன்லைனில் எந்தெந்த பாடங்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்படும்.புதிய கல்வி கொள்கை குறித்து, பொதுமக்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த புதிய கல்வி கொள்கையை 2023ல் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து இதுவரை ஆலோசனை செய்யவில்லை. பா.ஜ. உடனான கூட்டணியால் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்பது மக்கள் கையில்தான் உள்ளது. தேர்தல் முடிந்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Reduced Curriculum Report to Chief on Day 4: Minister Senkottayan Information
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...