×

இந்தியா -இலங்கை - மாலத்தீவு 6 ஆண்டுகளுக்குப் பிறகு முத்தரப்பு பேச்சுவார்த்தை

கொழும்பு: இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகள் இடையே, 6 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. கடல், பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை கடைசியாக டெல்லியில் கடந்த 2014ல் நடந்தது. அதன் பிறகு, இந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. தற்போது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இப்பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில், வங்கதேசம், மொரீஷியஸ் மற்றும் செசல்ஸ் நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டன. இந்திய அரசு சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, மாலத்தீவு பாதகாப்பு துறை அமைச்சர் மரியா திதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடல் பாதுகாப்பு, எல்லைகள் குறித்த தெளிவு, மாசு கட்டுபடுத்துதல் பொறுப்பு, தகவல்கள் பரிமாற்றம், போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலை தடுப்பது, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் போன்றவற்றில் கூட்டு முயற்சியாக ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. இதன்மூலம், அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பு மேம்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்திய - பசிபிக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்துவரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதால் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags : India ,talks ,Sri Lanka ,Maldives , India-Sri Lanka-Maldives trilateral talks after 6 years
× RELATED பா.ஜவின் தேர்தல் அலப்பறைகள் கச்சத்தீவு போனது.. பாகிஸ்தான் வந்தது..