விபத்துகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: விபத்துகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை என்ற நடவடிக்கையில் போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் பைக் மற்றும் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதேபோல இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஹெல்மெட் அணியாமல் செல்வதே காரணம். இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. மேலும் நீதிமன்றம் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி வாகனங்களுக்கு பெட்ரோல் முக்கியம் என்பதால் இனி பங்கில் பெட்ரோல் போட வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்று புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆலோசனையின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன் போக்குவரத்து துணை கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். கார் உள்பட வாகனங்களில் செல்வோர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை பெட்ரோல் நிலையங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தை மாவட்ட வழங்கல் துறையுடன் இணைந்து பெட்ரோல் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவேண்டும். மேலும் சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இந்த விழிப்புணர்வு பதாகை வைக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: