நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோ விவகாரம் முன்னாள் நீதிபதி கர்ணனிடம் 2வது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

சென்னை: நீதிபதிகளின் குடும்பங்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குறித்து அவதூறாக வீடியோ பதிவு செய்த விவகாரத்தில், முன்னாள் நீதிபதி கர்ணனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த முன்னாள் நீதிபதி கர்ணன். இவர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மேற்குவங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவர் வீடியோக்கள் சில யூ-டியூபில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ பதிவில், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் குறித்தும், பெண் வழக்கறிஞர்கள் குறித்தும் அவதூறான சில கருத்துக்கள் பேசி வீடியோ பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து, தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வீடியோ பதிவுடன் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் நீதிபதி கர்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 30 தேதி விளக்கும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மனை தொடர்ந்து முன்னாள் நீதிபதி கர்ணன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 26ம் தேதி மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் துரை முன்பு ஆஜரானார். அப்போது, விசாரணை அதிகாரி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முன்னாள் நீதிபதி கர்ணன் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தை விசாரணை அதிகாரிகள் வாக்கு மூலமாக பதிவு செய்தனர். 5 மணி நேரம் நடந்த விசாரணை நடைபெற்றது. அதன்பிறகு நேற்று விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று காலை 10.50 மணியளவில் இரண்டாவது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: