சத்துணவு ஊழியர்கள் நியமன குழுவில் ஒன்றிய தலைவர்களையும் சேர்க்க கோரி வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 93 சத்துணவு அமைப்பாளர்கள், 11 சமையல்காரர்கள், 97 சமையல் உதவியாளர்கள் என 201 காலி இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் அறிவிப்பை ஈரோடு கலெக்டர் செப்டம்பர் 21ம் தேதி வெளியிட்டார். தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் பிரிவு 96ல் பணி நியமன குழுவில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோர்  இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதை கணக்கில் எடுக்காமல் சமூக நலத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்திற்கு முரணாக வெளியிடப்பட்ட அரசாணை மற்றும் ஈரோடு கலெக்டரின் அறிவிப்பு ஆகியவற்றை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். சத்துணவு பணியாளர்கள் நியமன குழுவில் ஊராட்சி ஒன்றிய தலைவரையும் சேர்க்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் ஈரோடு கலெக்டர் 3 வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டார்.

Related Stories: