×

கொளத்தூர் தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் பரபரப்பு அதிமுகவினர் கோஷ்டி மோதல்: மேடைக்கு அருகே யார் நிற்பது என்பதில் தகராறு; வாக்குவாதம் முற்றி நாற்காலிகள் பறந்தன

சென்னை: கொளத்தூரில் அதிமுக தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் இபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மேடைக்கு அருகே யார் நிற்பது என்பதில் ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி நாற்காலிகள் பறந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொளத்தூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டம் சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இபிஎஸ் அணியை  சேர்ந்த வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த  ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜேசிடி பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டம் ஆரம்பிக்கும் நேரத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடை அருகே வந்தனர். அப்பொழுது அங்கு இருந்த இபிஎஸ் அணியை சேர்ந்த மகளிர் அணி பிரமுகர் ஒருவர் கிருஷ்ணமூர்த்தி தரப்பினருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் பாபு ஆதரவாளர்களுக்கும் கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்களுக்கும் இடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜேசிடி பிரபாகரன் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்தவர்கள் சமாதானம் அடைய மறுக்கவே கோபமடைந்த ஜேசிடி பிரபாகரன் அனைவரையும் மேடையிலிருந்து கீழே இறங்கி அமர சொன்னார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு அனைவரும் அமர தொடங்கினர். மேடையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த  கிருஷ்ணமூர்த்திக்கு இடம் கொடுத்ததால்தான் ஆத்திரமடைந்த இபிஎஸ் அணியை சேர்ந்த  எதிர்தரப்பினர் தேவையில்லாமல் சண்டை ஏற்படுத்தியதாக ஒரு தரப்பினரும், மேடையில் அளவுக்கு அதிகமாக கூட்டம் சேர்ந்து விட்டதால் தான் மேடையில் இருந்து அனைவரையும் கீழே இறங்க சொன்னோம் என மற்றொரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர்.  இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறி நாற்காலிகள் பறந்தன. இதனையடுத்து ஜேசிடி பிரபாகரன் மீண்டும் அனைவரையும் சமாதானப்படுத்தினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொளத்தூரில் நடக்கும் முதல் தேர்தல் பணிக்குழு கூட்டத்திலேயே அதிமுகவின் இருதரப்பினரும் மோதிக் கொண்ட சம்பவம் கட்சியினரிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* ஒன்றுமே தெரியாமல் பதவிக்கு வரவில்லை
ஜேசிடி பிரபாகரன் மேடையில் பேசும்போது ‘‘நாங்கள் ஒன்றும் ஒன்றுமே தெரியாமல் இந்தப் பதவிக்கு வந்து விடவில்லை. நாங்களும் அனைத்தையும் பார்த்துவிட்டுத்தான் இந்தப் பதவிக்கு வந்துள்ளேன். உருட்டுக்கட்டை, கத்தி என எல்லாவற்றையும் பார்த்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். இங்கே ஏதாவது தவறாக நடந்து இருந்தால் அதை மறந்து மன்னித்து விடுங்கள்’’ என தொண்டர்களிடையே பேசினார்.

Tags : Kolathur Election Working Committee ,meeting ,Dispute ,AIADMK ,stage , Kolathur Election Working Committee Meeting Sensational factional clash: Dispute over who is standing near the stage; The debate flew and the chairs flew
× RELATED திருச்செங்கோட்டில் தேமுதிக கூட்டம்