வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்கு: அரியானா போலீஸ் நடவடிக்கை

புதுடெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 27, 28 தேதிகளில் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த பஞ்சாப், அரியானா விவசாயிகள் அனுமதி கோரி இருந்தனர். இதனையொட்டி, கடந்த வியாழனன்று அவர்கள் `டெல்லி சலோ’ பேரணியைத் தொடங்கினர். கடந்த 2 நாட்களாக இவர்களை அரியானா-டெல்லி எல்லையில் உள்ள ஷிங்கு பகுதியில் தடுத்து நிறுத்திய அரியானா போலீசார், கண்ணீர் புகைக்குண்டுகள், தண்ணீரை பீய்ச்சி கலைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் தடுப்புகளை உடைத்து முன்னேறினர். போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராடுவதற்கு அனைத்து குடிமகன்களுக்கும் உரிமை உள்ளது என வாதிட்டன. மேலும், போராட்டம் வன்முறையாக மாறுவதை தவிர்க்க, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டுமென்று வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் டெல்லியின் புராரியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் அமைதியான முறையில் போராட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இருப்பினும், நேற்று முன்தினம் இரவு, ஷிங்கு, திக்ரி எல்லையில் கூடிய விவசாயிகள் போராட்ட மைதானத்திற்கு செல்லாமல் அங்கேயே முற்றுகையிட்டுள்ளனர். இதனால், தலைநகர் போலீசார் திண்டாடி வருகின்றனர். நேற்று எந்த இடத்திலும் போலீசாரின் தடியடியோ, விவசாயிகளின் வன்முறையோ நடக்கவில்லை.

இந்நிலையில், அரியானா மாநிலம், அம்பாலா அருகே மொக்ரா கிராமத்தில் கூடிய ஆயிரக்கணக்கான விவசாயிகதள கலைந்து போகும்படி போலீசார் அறிவுறுத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து, பாரதிய கிசான் சங்க தலைவர் குர்னாம் சிங் சாருனி உள்ளிட்ட பலர் மீது  போலீசாரை கொலை செய்ய முயற்சி, வன்முறையை தூண்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனிடையே, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் டிராக்டர்கள், லாரிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரை நோக்கி வருவதால்பதற்றம் நிலவுகிறது.

* காலிஸ்தான் ஆதரவாளர்களும் பஞ்சாப் முதல்வரும் தூண்டுகின்றனர்: அரியானா முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அரியானாவில் ஆட்சி செய்யும் பாஜ முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர், ``பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே போராட்டம் நடத்துகின்றனர். அரியானா விவசாயிகள் இதில் பங்கேற்கவில்லை. கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் அரியானா விவசாயிகளுக்கும், மாநில போலீசாருக்கும் நன்றி. பஞ்சாப் முதல்வர்தான் இந்த போராட்டத்தை தூண்டி விடுகிறார். முதல்வர் அலுவலக அதிகாரிகள் அதனை வழி நடத்துகின்றனர். இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. காலிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்களும் இந்த போராட்டத்தை ஆதரிக்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடும்’’ என்றார். பஞ்சாப் முதல்வரையும், காலிஸ்தான் தீவிரவாத அமைப்பையும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி கட்டார் அளித்துள்ள இந்த பகிரங்க பேட்டி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* மோடியின் ஆணவத்தை காட்டுகிறது

டெல்லி போராட்டத்துக்காக சென்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தும் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில் வெளியிட்டார். இதனுடன், ‘இது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் புகைப்படம். ஒரு விவசாயி ஒரு போர் வீரனுக்கு சமமானவன் என்ற அர்த்தத்தை தரும், ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்பது நமது முழக்கமாக இருக்கிறது ஆனால், பிரதமர் மோடியின் ஆணவமானது இன்று ஒரு வீரர், விவசாயிக்கு எதிராக செயல்படும் சூழலை உருவாக்கி உள்ளது. இது மிகவும் ஆபத்தானது,’ என குறிப்பிட்டார்.

* அடக்குமுறையை நிறுத்துங்கள்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (எம்எல்), ராஷ்டிரிய ஜனதா தளம், அனைத்து இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய 8 கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடும் அடக்குமுறை, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தண்ணீரை பீய்ச்சி அடித்தல், சாலைகளை மறித்தல், போலீஸ் தடுப்பு அரண்கள், டெல்லியை சுற்றிய தேசிய நெடுஞ்சாலைகளில் குழி தோண்டுதல் என விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் மீறி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெற்றிகரமாக தலைநகர் டெல்லியை அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான, பிற்போக்குத் தனமான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை நடத்த முன் வந்திருக்கும் அவர்களின் மன உறுதி, தைரியத்தை மதிக்கிறோம்.

விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க டெல்லியில் ஒன்று கூடுவதை தடுக்க நினைத்த மத்திய அரசு, பணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து வரும் நிலையில், போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள மைதானம் மிக சிறியது. எனவே, அவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த ராம் லீலா மைதானம் அல்லது அது போன்ற பெரிய மைதானத்தை ஒதுக்கி தரவும், உணவு, தங்குமிடம் உள்பட அவர்களுக்கு தேவையானவற்றை அரசு ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டு கொள்கிறோம்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், மக்களுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயம் ஆகியவற்றை அழிக்கும், குறைந்தபட்ச ஆதார விலையை ஒழிக்கும், நாட்டின் தேசிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை அறிவுறுத்துகிறோம். மத்திய அரசு ஜனநாயக செயல்முறை மற்றும் விதிகளை கடைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கவலைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: