தங்க கடத்தல் சொப்னாவின் ஆடியோ சர்ச்சை கேரள குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் திடீர் சிக்கல்: சுங்க இலாகா முட்டுக்கட்டை

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் ராணி சொப்னாவின் ஆடியோ குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சொப்னா, முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஐஏஎஸ் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் சொப்னா பேசிய ஆடியோ வெளியானது. அதில், முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் இந்த வழக்கில் அப்ரூவர் ஆக்குவதாக விசாரணை அதிகாரிகள் என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக , கேரள ஹை-டெக் பிரிவு கூடுதல் எஸ்பி பிஜிமோன் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு டிஜிபி லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். மேலும், எந்த வழக்கும் பதிவு செய்யாமல் சொப்னாவிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முயன்றனர். ஆனால், அதற்கு சுங்க இலாகா அனுமதி மறுத்து, முட்டுக்கட்டை போட்டு விட்டது. காபிபோசா சட்டத்தின் கீழ் சொப்னா கைது செய்யப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால், வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதி பெறமுடியும். இதையடுத்து, சொப்னாவிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் உள்ள ஒருவரின் ஆடியோவை பதிவு செய்வதும், பகிர்வதும் சிறை சட்டப்படி குற்றமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* கடத்தலில் தொடர்பில்லை

தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில், கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனிச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர், சுங்க இலாகாவின் விசாரணை காவலில் இருக்கிறார். விசாரணையில் அவர், ‘தங்க கடத்தலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை,’ என சுங்க  இலாகாவிடம் தெரிவித்துள்ளார். தங்க கடத்தலில் தனக்கு சிவசங்கர் உதவியும், ஆலோசனைகளையும் வழங்கியதாக சமீபத்தில் சுங்க இலாகாவிடம்  சொப்னா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: