×

திருமணத்துக்காக மதம் மாற்றப்படுவதை தடுக்கும் கட்டாய மதமாற்ற சட்டத்துக்கு உபி. ஆளுநர் ஒப்புதல்: உடனடியாக அமலுக்கு வந்தது

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமணத்துக்காக கட்டாய மத மாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை விதிப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமணத்துக்காக குறிப்பாக பெண்கள் மத மாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என, கடந்த மாதம் உத்தர பிரதேசத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தபோது  முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். ‘நேர்மையற்ற முறையில் செய்யப்படும் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்,’ என அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய வரைவு சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. இதற்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய மத மாற்றத்தை தடுப்பதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்
* பிற மதங்களை சேர்ந்த ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
* பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
* மேலும், கட்டாய மத மாற்றத்தின் மூலம் திருமணம் நடந்ததாக நிரூபிக்கப்பட்டால், அந்த திருமணம் ரத்து செய்யப்படும்.
* தவறான வழிகாட்டுதல், நிர்ப்பந்தம், மோசடி வழிமுறைகள், மோசடி திருமணம் ஆகியவற்றின் மூலம் எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு மாறுவதை இச்சட்டம் தடை செய்கிறது
* இந்த செயல்களின் மூலம் ஒருவர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தால், அவருடன் ரத்த தொடர்புடையவர்கள், புகார் அளிக்கலாம்.
* சமூக அமைப்புகள் மூலமாக ஏராளமானவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டால், அந்த அமைப்பு  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* இச்சட்டத்தின் கீழ் ஒருமுறை தண்டனை பெற்றவர்கள் மீண்டும், அதே குற்றத்தை செய்தால் இரட்டை தண்டனை அளிக்கப்படும்.

Tags : conversion ,Governor , Sub for the Compulsory Conversion Act to prevent conversion for marriage. Governor's Approval: Effective immediately
× RELATED சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்