வைகை, கண்மாயில் கழிவுநீர் கலப்பால் 15 அடிக்கு மேல் பொங்கிய விஷ நுரை: பாலத்தை தாண்டி சாலையில் படர்ந்தது; மதுரையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி

மதுரை: மதுரையில் பெய்த மழைநீருடன், கழிவுநீரும் கலந்து செல்லூர் கண்மாய் மற்றும் வைகையாற்றில் திடீரென 15 அடி உயரத்துக்கு எகிறியது. மதுரையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், செல்லூர் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கழிவுநீர் குழாய்கள் வழியாக ரசாயனக் கழிவுநீரும் கண்மாய் நீருக்குள் பெருமளவு கலந்தது. மறுகால் பாய்ந்த தண்ணீர் 15 அடி வரை நுரைபொங்கி வெளியேறிச் சென்றது. இந்த தண்ணீர் மீனாம்பாள்புரம் பாலத்தின் மீதேறி, சாலைகளிலும் நுரை பறந்தது. இதையடுத்து இப்பகுதி மக்கள் திரண்டனர். பலர் ‘செல்பி’ எடுத்தனர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் நுரை மேலும் அதிகரித்தது. . இதனால் வைகையாற்று நீரில் விஷத்தன்மை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக மக்கள் அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து மதுரை செல்லூர் கண்மாயின் நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி சங்கரபாண்டியன் கூறும்போது, ‘‘மதுரை செல்லூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய்களில் குடியிருப்போர் குழாய்களை போட்டு கழிவுநீரை விடுகின்றனர். மாநகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நிலத்தடி நீருக்கு இந்த கண்மாய்தான் ஆதாரமாக உள்ளது. ஆகாயத்தாமரையும் அதிகளவில் உள்ளது. கழிவுநீர் கலந்து விஷமாக மாறி, இப்போது வைகையாற்றிலும் விஷ நுரைநீர் ஓடுகிறது. இதன்பேரில் தீவிர நடவடிக்கை எடுத்து கண்மாயையும், ஆற்றையும் காக்க வேண்டும்’’ என்றார். இதை தொடர்ந்து ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி துவங்கியது. இதை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ “வைகையாற்றில் கலக்கும் கழிவுநீரை நன்னீராக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் தண்ணீருடன் கழிவுநீர் சேர்ந்ததால்தான் இந்த நுரை வந்துள்ளது” என்றார்.

Related Stories: