சிசிடிவி கேமராக்கள் சரிவர செயல்படாததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செல்போன் திருட்டு சம்பவம் அதிகரிப்பு: டாக்டர்கள், நோயாளிகள் வேதனை

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் சரிவர செயல்படாததால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளை கவனிக்க உறவினர்கள் உடன் தங்கியுள்ளனர். இவர்கள் இரவில் மருத்துவமனை வளாகத்திலேயே, தங்களது உடமைகளுடன் படுத்து உறங்குவது வழக்கம்.

இவர்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. அதுமட்டுமின்றி மருத்துவர்களின் செல்போன்களும் திருடுபோனது. இதை தடுக்கும் வகையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை முறையாக பராமரிக்காததால், பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதில்லை. இதன் காரணமாக, மருத்துவமனையில் மீண்டும் செல்போன், நகைகள், பைக்குகள், பணம் போன்றவை அடிக்கடி திருடுபோவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடுபோனதாக கூறப்படுகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் பணியில் இருந்த 24 வயது மதிக்கதக்க பெண் மருத்துவர், தனது அறையில் செல்போனை வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது, செல்போன் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது: மருத்துவமனை வளாகத்தில் காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பல கேமராக்கள் செயல்படவில்லை. முக்கியமான இடங்களில் கூட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதை பயன்படுத்தி அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* போலீஸ் பற்றாக்குறை

மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். போதிய போலீசார் பணியில் இல்லாததால் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories: