என்னை பார்த்து இப்படி கேட்டுடீங்களே? டிரம்ப் வேதனை

வாஷிங்டன்: ‘பிடெனிடம் தோற்று விட்டதை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என கேள்வி கேட்ட நிருபரிடம், ‘என்னிடம் இப்படி கேட்டு விட்டீர்களே’ என டிரம்ப் வேதனை தெரிவித்தார். இம்மாதம் 3ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடென் 306 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிபர் டிரம்ப் 232 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். இருப்பினும், தேர்தலில் பிடென் முறைகேடுகள் செய்து விட்டதாக கூறி, அவருடைய வெற்றியை டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். மேலும், முறைகேடுகள் நடந்ததாக கருதப்படும் மாகாணங்களில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தொடர்ந்து வழக்குகளை தொடர்ந்து வருகிறார். அவை ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டு வருவதால், டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிடென் வெற்றி பெற்றார்.

இதை எதிர்த்து டிரம்ப்பின் தேர்தல் குழு வழக்கு தொடர்ந்தது. அதில், ‘பிடெனின் வெற்றி மோசடியானது’ என்று கூறப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘சுதந்திரமான, நேர்மையான தேர்தல்தான் நம் ஜனநாயகத்தின் ரத்த ஓட்டமாக உள்ளது. அந்த வகையில், டிரம்ப் தரப்பு கூறியிருக்கும் தேர்தலில் முறைகேடு என்பது மிகவும் கவனத்துக்குரிய குற்றச்சாட்டு. ஆனால், புகாருக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. அதனால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என்று உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, பிடென் வெற்றி பெற்றதாக சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. இது, டிரம்ப் தரப்புக்கு மீண்டும் ஒரு பின்னடைவாகவே அமைந்துள்ளது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக டிரம்பின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது, ஜெப் மேசன் என்ற நிருபர், ‘பிடெனிடம் தோற்று விட்டதை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என்று பலமுறை கேள்வி கேட்டார். இதனால், டிரம்ப் கோபம் அடைந்தார். பின்னர், ‘‘நான் இப்போதும் அதிபர். என்னிடம் இப்படி கேடகலாமா? முறைகேடுகள் செய்து பிடென் வெற்றி பெற்றுள்ளார்?’ என்றார் வேதனையுடன்.

* சீன, ரஷ்ய நிறுவனங்களுக்கு தடை

சட்ட விரோத அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, கடந்த 2018ம் ஆண்டு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், புதிதாக ஏவுகணை தயாரிப்புகளை ஈரான் மேற்கொள்வதாகவும், அதற்கு ரஷ்யா, சீனாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் உதவி செய்வதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு அமெரிக்கா நேற்று பொருளாதார தடை விதித்தது.

Related Stories: