×

டெல்லியை விவசாயிகள் முற்றுகை: வேளாண் சட்டங்களை எதிர்த்து 3வது நாளாக தீவிரமாகும் போராட்டம்; 5 மாநிலங்களில் இருந்து குவிந்தனர்; போராட்ட இடத்துக்கு செல்ல மறுப்பு; துணை ராணுவம் குவிப்பு; பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு

புதுடெல்லி: போராட்டத்திற்கு அனுமதி வழங்கியபோதும் நகர மறுத்து, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ச்சியாக டெல்லி எல்லைப் பகுதியில் 3வது நாளாக தங்கியிருந்தனர். இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் மாநில எல்லையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக “டெல்லி சலோ” என்கிற பெயரில் இரண்டு நாள் பேரணிக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. அதன்படி, கடந்த மூன்று தினங்களாக டெல்லியை நோக்கி பஞ்சாப், அரியானா, உபி, மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

துவக்கத்தில் விவசாயிகளின் பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசார், பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் புராரி பகுதியில் உள்ள மிகப்பெரிய நிராங்கரி மைதானத்தில் அமைதியான வழியில் போராட அனுமதி வழங்கினர். இதனால், போலீசாரின் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு, தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்டியது உள்ளிட்ட பல்வேறு தடைகளை கடந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். ஆனால், தற்போதைய நிலையில், நிராங்கரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினாலும், பலர் தலைநகருக்குள் செல்லாமல், திக்ரி, சிங்கு எல்லையிலேயே தங்கி போராட்டத்தை தொடர்கின்றனர்.

மேலும், பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த சக விவசாயிகளின் வருகைக்காக பலர் அங்கேயே காத்திருக்கின்றனர். இரவு நேரங்களில் நெடுஞ்சாலை பகுதியை சமையல் கூடாரமாக மாற்றி சமைத்து உண்டு அங்கேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிராங்கரி மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த இணை கமிஷனர் சுரேந்தர் சிங் யாதவ் கூறுகையில், “வடக்கு டெல்லி மைதானத்தில் இதுவரை சுமார் 600-700 விவசாயிகள் மட்டுமே வந்துள்ளனர். போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். எனவே, விவசாயிகள் இங்கு வந்து சேர்வார்கள் என்று நம்புகிறோம்” என கூறினார்.

பஞ்சாபிலிருந்து நகரை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய வழிகளில் ஒன்று சிங்கு எல்லை. நேற்று இந்த வழியில், பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் கூடினர். பின்னர் அவர்கள் தங்களின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்ய ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இந்தகூட்டத்திற்குப் பிறகு, சிங்கு எல்லையில் தங்கள் போராட்டத்தைத் தொடருவதாக அறிவித்தனர். இதுபற்றி போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “நாங்கள் இங்கிருந்து (சிங்கு எல்லை) நகர்ந்து  செல்லமாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை வீடு திரும்பவும் மாட்டோம். எங்களோடு கைகோர்க்க பஞ்சாப் மற்றும் அரியானாவிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் சேர வந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை மாலை முதல் திக்ரி எல்லையில் முகாமிட்டுள்ள சுக்விந்தர் சிங் என்பவர் தெரிவிக்கையில், “நாங்கள் தொடர்ந்து இங்கிருந்தவாறே எதிர்ப்புத் தெரிவிப்போம். அரியானாவிலிருந்து இன்னும் பல விவசாயிகள் எங்களுடன் சேரவில்லை. அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்’’  என்றார். டெல்லி காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் ஏன் தேசிய தலைநகருக்குள் நுழைய விரும்பவில்லை என்று கேட்டதற்கு, சிங் தெரிவிக்கையில், “புராரியில் போலீசார் வழங்கிய எந்த மைதானத்திற்கும் நாங்கள் செல்ல விரும்பாததற்கு காரணம், நாங்கள் ஜந்தர் மந்தருக்குச் சென்று அங்கு அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்த விரும்புகிறோம். அடுத்த முடிவு எடுக்கும் வரை நாங்கள் இங்கு எல்லையில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இதேபோன்று, சிங்கு தவிர, திக்ரி எல்லையிலும் திரண்டுள்ள விவசாயிகள் நீண்டதொரு போராட்டத்திற்கு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. அவர்கள் உணவு சமைக்க தேவையான பாத்திரங்களை கொண்டு வந்துள்ளனர். எனவே, போராட்டம் தீவிரமடையும் என்றே தெரிகிறது. 5 மாநிலங்களில் இருந்து விவசாயிகள் 3வது நாளாக குவிந்துள்ளதால் டெல்லி எல்லைகள் மற்றும் டெல்லி வரும் சாலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து போய் உள்ளன. இதனால் பாதுகாப்பிற்காக துணை ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லைகளில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே டிசம்பர் 3ம் தேதி மத்திய வேளாண் அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். போராட்டம் நடத்த அனுமதி அளித்த இடத்திற்கு அவர்கள் சென்ற உடனேயே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.

* திக்ரியில் தான் தங்கியிருப்போம்
திக்ரியில் இருக்கும் மற்றொரு விவசாயி  ஜக்தார் சிங் பாகிவந்தர் கூறுகையில், “நாங்கள் புராரி நோக்கி  செல்லமாட்டோம். நேற்று, டெல்லிக்குள் நுழைய எங்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டவுடன், 50 பேர் கொண்ட குழுக்களில் ஒன்றன் பின் ஒன்றாக  முன்னேறும்படி கூறப்பட்டது. நாங்கள் குழுக்களாக செல்ல மறுத்துவிட்டோம். இது  எங்களைப் பிரிப்பதற்கான ஒரு முயற்சி. வெவ்வேறு எல்லைகளைத் தாண்டி நாங்கள்  ஒன்றிணைந்துள்ளோம். இதேபோன்று நாங்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருப்போம்.  இப்போதைக்கு, நாங்கள் இங்கே திக்ரியில் தங்க முடிவு செய்துள்ளோம்.  இங்கிருந்து எங்கள் போராட்டத்தை தொடர்வோம்”என்றார்.

Tags : siege of Delhi: Struggle ,states ,talks ,Amitsha , Farmers' siege of Delhi: Struggle intensifies for 3rd day against agricultural laws; Accumulated from 5 states; Refusal to go to the place of struggle; Paramilitary concentration; Amitsha calls for talks
× RELATED போலீசாரை கண்டித்து விவசாயிகள் மறியல்