குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 6 மணிநேரம் தவித்த மூதாட்டியை பேரிடர் படையினர் மீட்பு

குடியாத்தம்: நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டம்  குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியில் பெய்த மழையால் கடந்த 2 நாட்களுக்கு முன் அணை நிரம்பி 18 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் இருகரையும் தொட்டபடி செல்கிறது. ஆற்று வெள்ளத்தால் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் குடியாத்தம் அடுத்த செதுக்கரையில் கவுண்டன்ய ஆற்றின் நடுப்பகுதியில்  மேடான இடத்தில் முனுசாமி, அவரது மனைவி எல்லம்மாள்(55) ஆகியோர் குடிசை கட்டி அங்கு பன்றிகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் பலத்த மழையால் முனுசாமி, பன்றிகளுடன் வெளியேறி நகர்புறப்பகுதிக்கு சென்றுவிட்டாராம். ஆனால் எல்லம்மாள் மட்டும் குடிசையில் தங்கியுள்ளார்.

    

இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் எல்லம்மாள் வசிக்கும் குடிசையை சுற்றி சூழ்ந்தபடி சென்றதால் அவர் வெளியேற முடியாமல் தவித்தார். தகவலறிந்த குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் உத்தரவின்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் நேற்றிரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் நள்ளிரவு 1 மணியளவில் வந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தின் நடுவில் சிக்கிய மூதாட்டி எல்லம்மாளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் போராடி இன்று காலை 7 மணியளவில் எல்லம்மாளையும், குடிசையில் இருந்த பொருட்களையும் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து முகாமில் தங்க வைத்துள்ளனர்.

Related Stories: