ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை..!! பங்க்குகளில் பதாகைகள் வைக்க போக்குவரத்து காவல்துறை உத்தரவு

சென்னை: ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்று பெட்ரோல் பங்க்குகளில் பதாகைகள் வைக்க போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாசகங்களை காட்சிப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறை ஆணையர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் தற்போது சென்னையில் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளார்.

மேலும், ஹெல்மட் இல்லை, சீட் பெல்ட் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை என பலகை வைக்கவேண்டும் எனவும், விழிப்புணர்வு வாசகங்கள் பெட்ரோல் பங்க்குகளில் வைத்திருப்பதை போக்குவரத்து காவலர்கள் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் அவர்களுக்கு போக்குவரத்து காவல்துறை கூடுதல் இயக்குநர் கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த முரளிதரன், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, மாஸ்க் அணிந்து கொண்டுதான் கட்டாயம் வெளியே வரவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனவே பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு நாங்களும் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கமுடியும் என கூறிருந்தோம். ஆனால் நிறையப்பேர் மாஸ்க் இல்லாமல் வந்தபோதும், அரசு ஆணை பிறப்பிக்காததால் எங்களால அவர்களைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தற்போது, ஹெல்மட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது. எனவே இதுகுறித்து காவல்துறைதான் நடவடிக்கை எடுக்கமுடியும்; எங்களால் முடியாது. நாங்கள் அறிவிப்பு பலகையை பெட்ரோல் பங்குகளில் வைத்து, பொதுமக்களுக்கு அறிவுறுத்தலாம். எங்களால் ஆன உதவியை காவல்துறைக்கு செய்வோம் என்று கூறியுள்ளார்.

Related Stories:

>