×

வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா!

நான் வேலைக்கு போகும் பெண். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரன்னு தான் இயங்கிக் கொண்டேதான் இருக்கேன். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டியதாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் ஏற்படும் ெடன்ஷன் அலுவலகம் செல்லும் வரை உள்ளது. இதனால் உடல் மட்டுமில்லை மனசும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்கு யோகா செய்தால் நல்லதுன்னு சொல்றாங்க. என் உடல் மற்றும் மனச்சொர்வை நீக்க வீட்டில் இருந்தபடியே சிம்பிளா என்ன ஆசனம் செய்யலாம்ன்னு ஆலோசனை கூறுங்கள்?
- லலிதா. கோவை

‘‘இருபத்து நாலு மணிநேரமும் காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு பெண்கள் பறந்துக் கொண்டு இருக்காங்க. குடும்பத்தை மட்டுமேகவனித்துக் கொண்டிருந்த பெண்களில் பலர் இப்போது வேலைக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவர்களது சுமைகள் கூடியிருக்கிறதே தவிர, குறையவில்லை. உடல் சோர்வினாலும், மனச்சோர்வினாலும் அவர்கள் அவதிப்படுவது இன்றைய காலக்கட்டத்தில் அன்றாட நடைமுறையாகிவிட்டது. இதிலிருந்து மீண்டு அவர்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க சில யோகாசனங்களை வீட்டிலேயே செய்யலாம்’’ என்கிறார் ஜோதிஷ் ஆர்.சீதாராமன். சவாசனம்தரையில் விரிப்பை விரித்து உயிரற்ற உடல் எவ்வாறு சலனமின்றி இருக்குமோ அதே போல் படுக்க வேண்டும். உடலும் உள்ளமும் தளர்ந்த நிலையில் பார்வைகள் சலனம் இன்றி மேல் நோக்கி பார்க்க வேண்டும். மூன்று நிமிடங்கள் வரை அவ்வாறு இருந்த பின் கால் பாதங்களை வலது இடதாக அசைத்தப் பின் எழுந்திருக்க வேண்டும். இந்த ஆசனம் செய்வதால், மன இறுக்கம் அகலும், முதுகு தண்டு வலி, கழுத்து வலிகள் குணமாகும்.

தடாசனம்

மூட்டுவலி இப்போது வயது வரம்பின்றி அனைவருக்கும் வருகிறது. இதனை தவிர்க்க இந்த ஆசனம் உதவும். தரையில் நேராக கால் முட்டிகள் சேர்ந்திருக்கும்படி நிற்க வேண்டும். பிறகு மெல்ல குதிக்காலை மேலே உயர்த்த வேண்டும். அந்த சமயத்தில் உடலின் மொத்த எடையும் சமச்சீராக வயிறு, கால் விரல்கள், கனுக்கால் பகுதியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முதுகு, கழுத்து, தலை பகுதிகள் நேராக இருக்க வேண்டும். பார்வை நேராக இருக்கட்டும். கண் மற்றும் வயிற்று பகுதிகளில் இறுக்கம் இல்லாமல் இயல்பாக தளர்வான நிலையில் இருக்கணும். இவ்வாறு 3 நிமிடங்கள் வரை பயிற்சி செய்யுங்கள்.

சித்தாசனம்

இது நமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம். முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கனுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீதுபடும்படி செய்யுங்கள். இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விடவும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்ந்து அமர்ந்த பின் எழ வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதால், மனம் அமைதி அடையும். ரத்த ஓட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும்.

தனுராசனம்

முதலில் வயிறு தரையில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கால்களை மெதுவாக தூக்க வேண்டும். அதன்பின் கைகளை பின்னோக்கி கொண்டுச் சென்று கால்களை பிடித்த படியே மார்பு மற்றும் முகத்தை மெதுவாக மேலே தூக்கி மூச்சை மெதுவாக இழுத்து வெளியில் விடுங்கள். இந்த ஆசனத்தை செய்வதால் உடலில் உள்ள சதைபிடிப்புகள் அகலும். குடல் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் போகும். முதுகெலும்பு சீராகும். வாயு கோளாறு நீங்கும். மாதவிடாய் பிரச்னைகள், நீரிழிவு நோய் குணமாகும்.

பக்தகோணாசனம்

முதலில் தரையில் அமர்ந்து கால்களை அகற்றி விரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் இரு கால் பாதங்களையும் ஒன்றாக இணைத்து கையினால் பிடித்துக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக உடலை முன்னோக்கி நகர்த்தி தலை பாதத்தில் படும் படி குனியுங்கள். இதில் நன்கு பயிற்சி பெற்ற பின் தரையை தொடும் அளவுக்கு முன்னேறுங்கள். இப்படி செய்வதால் சிறுநீர் குழாய் அடைப்புகள் நீங்கும். கர்ப்பப்பை சுத்தமாகும். ரத்த குழாய் அடைப்புகள் நீங்கும். சிறுநீர் சம்பந்தமான நோய்கள் அகலும்.இந்த ஆசனங்களை தொடர்ந்து செய்து வருவதால், உடல் லேசாகும், மன உளைச்சல் மற்றும் டென்ஷன் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் ஜோதிஷ் ஆர்.சீதாராமன்.

தொகுப்பு : ப்ரியா

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!