சென்னை விமானத்தில் பைலட்டுக்கு நெஞ்சுவலி : அமைச்சர் விஜயபாஸ்கர் தப்பினார்

திருச்சி, :நிவர் புயலால் திருச்சியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் 5 விமானங்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மழை விட்டதால் விமானங்கள் இயக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை 8 மணிக்கு இன்டிகோ விமானம் வந்தது. தொடர்ந்து, இந்த விமானம் மீண்டும் 8.45 மணிக்கு சென்னைக்கு புறப்பட தயாரானது.

இந்த விமானத்தில் சென்னை செல்வதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் திருச்சி விமான நிலையம் வந்திருந்தார்.

விமானத்தை இயக்குவதற்காக அதன் விமானி யுவராஜ் உதயகிரி, அவரது இருக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையறிந்த சக விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். உடனடியாக விமானி யுவராஜ் உதயகிரியை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தனது பயணத்தை ரத்து செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், கார் மூலம் சொந்த ஊர் திரும்பினார். தொடர்ந்து, விமானத்திலிருந்த 76 பயணிகள் இறக்கப்பட்டு அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து, இரவு 7.30 மணி வரை 26 பயணிகளை தவிர மற்ற பயணிகள் விமானம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சென்னை சென்றனர். பின்னர், மாற்று விமானி வந்த பின்னர், இரவு 7 மணிக்கு மீண்டும் அந்த விமானம் சென்னை புறப்பட்டு சென்றது. அதில் 26 பயணிகள் சென்னை சென்றனர்.

Related Stories: