சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தபாலில் பெற்று கொள்ளலாம் : கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலைக்கு பெருமளவில் பக்தர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் சபரிமலை ஐயப்பன் பிரசாதத்தை நேரடியாக வீட்டிலேயே பெற்று கொள்ள தபால்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் நிலையங்கள் மற்றும் துணை அஞ்சல் நிலையங்களில் (e-payment) இ.பேமெண்ட் மூலம் பணம் செலுத்தி தங்களுடைய வீட்டுக்கே பிரசாதம் பெறும் வகையில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து பிரசாதம் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.450 செலுத்தி தபால் அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒருநபர் அதிகபட்சம் 10 பிரசாத பாக்கெட் பெற முடியும். பிரசாத பாக்கெட்டுகளில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் இருக்கும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பிரசாதம் தேவைப்படுவோர் அதற்கான தனி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பித்த நபருக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டுக்கே பிரசாதம் அனுப்பப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: