×

நிவர் புயலை தொடர்ந்து உருவாகிறது “புரெவி”.... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... டிசம்பர் 2, 3ல் தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதுதான் ஒரு நிவர் புயல் தமிழகத்தை மிரட்டி சென்ற நிலையில் மீண்டும் ஒரு புதிய புயல் உருவாகலாம் என்று அறிவித்துள்ளது மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணியளவில் உருவானது.காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். .இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய புரெவி என்ற பெயர் வைக்கப்படும். டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகம், புதுவையில் பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளை முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும்.தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும்.வங்கக்கடலின் தென்கிழக்கு, மத்திய தெற்கு, அந்தமான் பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு 60 கி..மீ.வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே புதிதாக உருவாகும் புரெவி புயல் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.வட மாவட்டங்களில் நிவர் புயல் பாதிப்பு இன்னும் கணக்கிடப்படவே இல்லை. பாதிப்பில் இருந்து மக்கள் மீளவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு புயல் வீசும் என்று கூறப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் 9 செமீ மழையும்,திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 8 செமீ மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : storm ,Nivar ,Bay of Bengal ,Puthuvai ,Tamil Nadu , Nivar storm, Pruevi, Bay of Bengal, New Depression
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...