மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்கக் கோரி மனு.. இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து பல மாணவர்கள் பயனடைவர் என கோரிக்கை

மதுரை: மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2020-21 க்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரி மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடப்பாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு

2020-21ம் கல்வியாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு கடந்த 18ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதனிடையே, நிவா் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவ கலந்தாய்வு வருகிற 30ம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

11 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் இல்லை

இந்த நிலையில் 2020-21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய  நகரங்களில் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கலந்தாய்வு தொடங்கிய நிலையில், 11 கல்லூரிகளையும் பட்டியலில் தமிழக அரசு இதுவரை சேர்க்கவில்லை. ஆகவே நடப்பாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வில் விடுபட்ட 11 மருத்துவ கல்லூரிகளையும் சேர்க்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவ்வாறு 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் கலந்தாய்வு பட்டியலில் சேர்த்தால் இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து பல மாணவர்கள் பயனடைவர் என்றும் தம் மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>