மாமல்லபுரத்தை அழகுபடுத்த ஒதுக்கிய நிதி எவ்வளவு?: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டும் தெரியப்படுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், மாமல்லபுரத்தை யுனெஸ்கோ கலாச்சார சின்னமாக அங்கீகரித்துள்ளது.  எனவே, மாமல்லபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமாக பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆங்கிலப் புலமை பெற்ற சுற்றுலா வழிகாட்டி குழுக்களை அமைக்க வேண்டும்.  அந்த பகுதியில் உள்ள புராதன சின்னங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், முக்கிய இடங்களை மின்னொளியில் காட்சிப்படுத்தவும் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாமல்லபுரம் பாதுகாப்பு, பராமரிப்பு, அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான நிதியை ஒதுக்க  மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.   தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் பகுதியிலிருந்து வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அந்த பகுதியை மேம்படுத்த செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள், செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும், எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ெதரிவிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் 400 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நாடு முழுவதும் சுற்றுலா தலங்களுக்கு ரூ.5109 கோடி  ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையை பார்த்த நீதிபதிகள், நீதிமன்றம் கேட்பது மாமல்லபுரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றிதான். அந்த நிதி எவ்வளவு என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அட்வகேட் ஜெனரல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் எனக்கூறி விசாரணையை டிசம்பர் 4ம் ேததிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: