அரசு ஒப்பந்த பணிகளை செய்யும் ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் ரெய்டு: வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியது

சென்னை: திருப்பூர் வீரபாண்டி பல்லடம் சாலையில் ஏ.வி.எம். எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் முக்கிய ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் எடுத்து பணிகளை செய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் ராட்சத இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள், உயர் தொழில் நுட்பம் கொண்ட மின்சாதனங்களை வைத்து பணிகளை செய்கிறது. அரசுக்கு கட்டிடப் பணிகளையும் தற்போது ஒப்பந்தம் எடுத்து செய்து வருகின்றனர். திருப்பூரில் தலைமையிடமாக இந்த நிறுவனம் இயங்கினாலும், தலைநகர் சென்னை தி.நகர், நங்கநல்லூர் உள்ள அலுவலகங்கள்தான் பெரியது என்று கூறப்படுகிறது. ஒப்பந்த பணிகள் மேற்கொள்ள பல கோடி மதிப்புள்ள ராட்சத இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.

அதேநேரம் அரசு ஒப்பந்த பணிக்கான கணக்கு வழக்குகளை வருமான வரித்துறைக்கு முறையாக காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர, குறுகிய காலத்தில் பெரிய அளவிலான அரசு ஒப்பந்த பணிகளை செய்து இந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து ஏ.வி.எம். எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான திருப்பூர், சென்னை, நெல்லை என தமிழகம் முழுவதும் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து உரிமையாளர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>