செய்யாறில் பரபரப்பு பாலாற்று வெள்ளத்தில் மாடுகளுடன் அடித்து செல்லப்பட்ட வாலிபர்: 9 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

செய்யாறு :  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, பனமுகை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற கோவிந்தசாமி(30), விவசாயி. இவர் நேற்று காலை 7.30 மணியளவில் தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக பாலாற்றின் வழியாக அழைத்து சென்றார். அதே கிராமத்தை சேர்ந்த எல்லம்மாள்(65) என்பவரும் மாடுகளை அழைத்து சென்றார்.திடீரென பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் கோவிந்தசாமி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டார்.

கரையோரம் இருந்த எல்லம்மாள் மாடுகளுடன் தண்ணீரில் தத்தளித்து கரையேறினார். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோவிந்தாமி, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா மாமண்டூர் கிராமம் அருகே ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள மணல் மேட்டில் ஒதுங்கினார். வெள்ளம் இருபுறமும் சென்றதால் கரையை அடைய முடியவில்லை. அரக்கோணம் ராஜாளி பேரிடர் மேலாண்மை மீட்பு குழு வீரர்கள் பைபர் படகு மூலம் கோவிந்தசாமியை 9 மணி நேர போராட்டத்துக்குப்பின் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.

Related Stories:

>