×

சென்னை மாநகர்-புறநகரில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: “சென்னை மாநகர்-புறநகரில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 3வது நாளாக நிவர் புயலால் மழை பாதிப்பிற்கு உள்ளான மயிலாப்பூர், தி.நகர் தொகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். ஆய்வின் போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் பொன்முடி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை தென் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மயிலை த.வேலு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:மூன்றாவது நாளாக சென்னை மாநகரத்தில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசி வருவதிலிருந்து, அதிமுக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மழைநீர் வடிகால் கால்வாய்களை சீரமைக்காமல், இந்த குறைந்தபட்ச மழையைக் கூட தாங்க முடியாமல் மக்களை தவிக்க விட்டுள்ளதைக் காண முடிந்தது. தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை. கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகள்-ஏன், எனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலேயே பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவும் இல்லை; வெளியேற்றப்படவும் இல்லை.  

“முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் பாதிப்புகள் குறைந்து விட்டது” என்று கூறும் முதல்வரும், அமைச்சர்களும் இன்னும் தேங்கி நிற்கும் தண்ணீர் பற்றிக் கவலைப்படாமல், பேட்டியளித்து கொண்டிருப்பது மட்டுமே, நிவர் சாதனை என்று செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.இதுவரை சென்னை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல லட்சக்கணக்கானோர் மழை வெள்ளத்திற்கும்-புயலுக்கும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. ஏன், பத்திரிகையிலேயே மழை வெள்ளம் எப்படி சென்னை புறநகர வாசிகளின் இரவு தூக்கத்தை கெடுத்து, அவர்களை இருட்டிலும் இன்னலிலும் தள்ளியது என்பதை வெளியிட்டும் கூட, அரசின் சார்பில் விளம்பரத்திற்காக பேட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டு - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் குறைவுதான் என்று கூறும் முதல்வரால், அந்த குறைந்த சேதம் என்ன என்பதைக் கூட உடனடியாக தெரிவிக்க முடியாமல், இனிமேல் தான் கணக்கு எடுக்க வேண்டும் என்கிறார். கஜா புயலில் எப்படி கணக்கு எடுக்கப்பட்டது என்பதை இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் மறந்து விடவில்லை. ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நாசமடைந்து விட்டது என்றாலும் - பயிர்க் காப்பீடு செய்யாதவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்கிறார்.

அதையாவது முழுமையாக-பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் - வாழை விவசாயிகளுக்கும் அதிமுக அரசு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுமா அல்லது வழக்கம் போல் அதிலும் முறைகேடுகளுக்கு வித்திடுவார்களா என்பதுதான் விவசாயிகளின் மனதில் உள்ள கேள்வி. இந்தக் கேள்வி ஏற்கனவே பட்ட பழைய அனுபவத்தால் எழுந்தது என்பதை மறுக்க முடியாது. எனவே, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து - மின்சாரத் துண்டிப்பால் அவதிக்குள்ளாகி - தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில்  குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு முதலில் சென்னை மாநகரில் - புறநகரில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை வெளியேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். “கணக்கு எடுக்கிறோம்” என்று காலம் கடத்தாமல், உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

43வது பிறந்தநாள் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது 43வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதை முன்னிட்டு தனது தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, உச்சி முகர்ந்து அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று, கலைஞர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த அவர், தொண்டர்களிடம் ஆசி பெற்றார். பின்னர், தனது இல்லத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றார்.உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் பல்வேறு நல உதவிகளை வழங்கினர். மாணவ, மாணவிகள் மற்றும் மழை, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்கினர்.

Tags : floods ,suburbs ,Chennai ,Government of Tamil Nadu ,MK Stalin , The suburbs of Chennai will be affected by floods To save people Action must be taken: MK Stalin's request to the Tamil Nadu government
× RELATED தூத்துக்குடியில் விடிய விடிய...