புயல் பேரிடர் காலங்களில் மீன்பிடி சாதனங்களை பாதுகாக்க தேவையான கட்டமைப்பு வேண்டும்: தமிழக அரசுக்கு மீனவர் சங்கம் கோரிக்கை

சென்னை: மீனவர் சங்கம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை:நிவர் புயல் காற்றால், சேதமடைந்த மீனவ மக்களின் பல்வேறு வகையான மீன்பிடி வலைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிற கடலோர மாவட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி வலைகளை பாதுகாக்கவும், பழுது பார்க்கவும் மீன்வலை கூடங்கள் அமைத்து தந்துள்ளதைப்போல சென்னை மாவட்ட மீனவ கிராமங்களிலும், கடற்கரையில், மீன்வலைக் கூடங்கள் அமைத்து மீனவ மக்களின் முதலீடுகள் மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

நிவர் புயல், சூறாவளிக் காற்றால் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவ மக்களின் அனைத்து பைபர் படகுகள் வெளிப்பொருத்தும் இயந்திரத்திற்குள்ளும் நுண்ணிய கடல் மணல் துகள்கள் நிறைந்து காணப்படுகிறது. மீனவ மக்களின் ஒவ்வொரு பைபர் படகு வெளிப் பொருத்தும் இயந்திரத்தையும் மெக்கானிக்கை வைத்து பழுது பார்க்க வேண்டிய அவசியம் அனைத்து மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நிவர் புயலால் பழுதான தமிழக மீனவர்களின் அனைத்து பைபர் படகு வெளிப்பொருத்தும் இயந்திரங்களை உடனடியாக பழுதுபார்க்க இழப்பீடு அல்லது புயல் நிவாரண உதவி வழங்க வேண்டும்.

மீனவ மக்கள் வாங்கும் பைபர் படகு வெளிப்பொருத்தும் இயந்திரங்களுக்கு 50% மானியம் வழங்க வேண்டும். புயல் போன்ற பேரிடர் காலங்களில் இருந்து மீன்பிடி சாதனங்களை பாதுகாக்க, ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் மீன்பிடி இயந்திரங்கள் பாதுகாப்பு கூடங்கள், அமைத்து தர வேண்டும். பைபர் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க தேவையான பொது பயன்பாட்டு இடங்கள், அதற்கான கருவிகள் அடங்கிய கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>