விமான டிக்கெட் விவகாரத்தில் முன்னாள் துணைவேந்தர் தண்டனை நிறுத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைன். இவர், 2008ம் ஆண்டு வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டில் பயணம் செய்துவிட்டு, உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாக கூறி மோசடி செய்து ரூ.2 லட்சத்து 22,332ஐ பல்கலையில் இருந்து கூடுதலாக பெற்றுள்ளார்.இதேபோல் ரூ.7லட்சத்து 82,124 வரை பல்கலைக்கழகத்தில் இருந்து மோசடி செய்து பெற்றுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், மீர் முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.24 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து மீர் முஸ்தபா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். துணைவேந்தர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெறலாம் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories: