நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாகக் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஆவன செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், கொரோனா கொடுந்துயரால் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திட முடியாத சூழல் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும். நெற்பயிர், வாழை, கரும்பு, பப்பாளி, மணிலா, மரவள்ளி உள்ளிட்ட அனைத்து சேதங்களையும் கணக்கிட்டு இழப்பு ஈடு அளிக்க வேண்டும்.

குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும் முழுமையான இழப்பீடு அளிக்க வேண்டும். நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளால்தான் மழை வெள்ளச்சேதங்கள் அதிகமாக இருக்கின்றன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு உதவிட மதிமுக தொண்டர்கள் மீட்புப் பணிகளில் முழு மூச்சாகச் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: