முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி

ஆக்லாந்து: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணி டி/எல் விதிப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டி மழை காரணமாக இரண்டு முறை தடைபட்டதை அடுத்து தலா 16 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடுவர்கள் அறிவித்தனர். டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் 16 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. பிளெட்சர் 34 ரன் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் போலார்டு ஆட்டமிழக்காமல் 75 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), பேபியன் ஆலன் 30 ரன் விளாசினர். நியூசி. பந்துவீச்சில் பெர்குசன் 4 ஓவரில் 21 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். சவுத்தீ 2 விக்கெட் எடுத்தார்.

அடுத்து டி/எல் விதிப்படி 16 ஓவரில் 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து வென்றது. செய்பெர்ட் 17, கான்வே 41, பிலிப்ஸ் 22 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஜேம்ஸ் நீஷம் 48 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), சான்ட்னர் 31 ரன்னுடன் (18 பந்து, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெர்குசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related Stories:

>