அரபிக் கடல் பகுதியில் விபத்தில் சிக்கியது மிக்-29 கே விமானம் :ஒரு விமானி மாயம்; மற்றொருவர் மீட்பு

மும்பை:அரபிக் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்ட மிக் - 29கே விமானம் விபத்தில் சிக்கியதில், ஒரு விமானி மாயமானார். மற்றொருவர் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் - 29 கே பயிற்சி விமானம் நேற்று மாலை 5 மணியளவில் அரபிக் கடல் மேற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்ட ேபாது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த தகவலை இந்திய கடற்படை இன்று தெரிவித்துள்ளது. அதில், ‘பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதில் ஒரு விமானி மீட்கப்பட்டார். நேற்று மாலை முதல் மாயமான இரண்டாவது விமானி தேடி வருகிறோம். விமான மற்றும் மேற்பரப்பு அலகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக் -29 கே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக் -29 விமானமானது, விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் ‘விக்ரமாதித்யா’விலிருந்து இயங்குகிறது. சமீபத்தில் முடிவடைந்த மலபார் பயிற்சியில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் கடற்படைகள் பங்கேற்றன. அந்த கூட்டுப் பயிற்சியில் மிக் -29 கே விமானங்களும் பங்கேற்றன. இந்தாண்டு பிப்ரவரியில், இந்திய கடற்படைக்கு ெசாந்தமான மிக் - 29 கே விமானம் ஒன்று, கோவாவில் நடைபெற்ற வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தின் போது விமான பைலட் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.  இந்த விமானம் தெற்கு கோவாவின் வாஸ்கோவில் உள்ள ஐ.என்.எஸ் ஹன்சா தளத்திலிருந்து பறந்து சென்ற போது விபத்தில் சிக்கியது. அப்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘பயிற்சி விமானி இயக்கிய போர் விமானம், அதன் ஓடுபாதையில் இருந்து வெளியேறிய போது விபத்து சம்பவம் நடந்தது’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்தாண்டு நவம்பரில் கோவாவில் நடந்த பயிற்சியின் போது, பறவை மோதியதில் மிக் - 29கே விமானம் விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக கடற்படை விசாரணை குழு அமைத்து விசாரித்து வருகிறது.

Related Stories: