குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவு!!

ராஜ்கோட்:குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துடன் குஜராத்தில் இதுவரை 5 தீவிபத்து சம்பவம் நடந்து கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், இன்று அதிகாலை இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 6 கொரோனா நோயாளிகள் பலியாகி உள்ளனர்.  

35 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.  இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டு உள்ளார். மேலும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவித் தொகையை அறிவித்துள்ளார்.

குஜராத்தில் மட்டும் கொரோனா நோயாளிகள் தீவிபத்தில் சிக்கியது, இது ஐந்தாவது சம்பவமாகும். கடந்த ஆகஸ்டில் அகமதாபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிர் இழந்தனர். சூரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் ஜாம்நகர் மற்றும் வதோதராவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலிருந்தும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மின் கசிவு காரணமாக தீவிபத்து நடந்திருக்கலாம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: