அமரீந்தர் சிங்குடன் திடீர் சந்திப்பு.. சித்துவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி? : மோதல்கள் சமரசமானதால் உற்சாகம்

சண்டிகர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், அதிருப்தி தலைவர் சித்துவும் திடீரென சந்தித்துக் கொண்டதால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் இருந்த முன்னாள்  கிரிக்கெட் வீரரும், எம்எல்ஏவுமான  நவ்ஜோத் சிங் சித்துவுக்கும்,  முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால், கடந்தாண்டு மே மாதம் சித்து அமைச்சர் பதவியில்  இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அமரீந்தர் சிங்கும், சித்துவும் நேற்று முன்தினம் திடீரென சந்தித்தனர். அதனால், பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது சித்துவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மற்றும் சித்து ஆகியோரின் சந்திப்பிற்குப் பிறகு, முதல்வரின் ஊடக ஆலோசகர் ரவின் தக்ரால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முதல்வர் - சித்து சந்திப்பு உற்சாகமானதாக இருந்தது. இருவரும் பஞ்சாபின் முக்கியமான அரசியல் விஷயங்கள் மற்றும் தேசிய நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து பேசினர்’ என்று தெரிவித்துள்ளார். இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முக்கியமான பிரச்னைகள் குறித்து பேசினர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமரீந்தர் சிங், சித்துவை தனது தம்பி என்றும், இன்றும் அவரது துறை காலியாக உள்ளது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: