அரசு ஊழியர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!!

சென்னை : அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பால் தான் தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை புரிந்துள்ளது. இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்!, எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதன் முழு விவரம்

இந்தியா டுடே நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தர வரிசைப் பட்டியலில் பெரிய மாநிலங்களுக்கிடையேயான சிறந்த மாநிலத்திற்கான விருதை இந்த ஆண்டும் (2020) தமிழ்நாடு பெற்று பெருமை சேர்த்துள்ளது.இந்தியா டுடே ஆண்டுதோறும் மாநிலங்களுக்கிடையேயான சிறந்த மாநிலங்களை பல்வேறு வகைப்பாடுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து பரிசு வழங்கி கௌரவித்து வருகிறது.  

2020ம் ஆண்டிற்கான பெரிய மாநிலங்களுக்கான இந்தியா டுடே விருதை தமிழ்நாடு மாநிலம் 2000 புள்ளிகளில் 1263.1 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதல் இடத்தை பெற்றுள்ளது.  மேலும் இந்த விருதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து 2018 முதல் 2020 வரை மூன்றாவது முறையாக பெற்று சிறப்பு சேர்த்துள்ளது.இந்த விருதானது கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதிலும், வணிக சூழல் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை தரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து விருது வழங்கப்படுகிறது.  மேலும் மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி, உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்படுகிறது.

    

மேற்கண்ட வகைப்பாடுகளின் அடிப்படையில் செய்யும் போது மாநிலங்களுக்கிடையே ஒரு சிறந்த மாநிலத்தை தேர்வு  செய்வதால் தேர்வு செய்யப்படும் மாநிலம் முன்னுதாரணமாக திகழ்கிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் சிறந்த ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காகவும், உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு பெற்று பெருமை சேர்த்துள்ளது.  முதலிடம் பெற்றதற்கான விருதினை வருகின்ற டிசம்பர் 5-ஆம் தேதியன்று இந்தியா டுடே நிறுவனத்தின் சார்பில் நேரில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories:

>