×

நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக காரணம் காட்டி தாலிக்கு தங்கம் திட்டத்தில் பல ஆயிரம் பேர் நிராகரிப்பு

கோவை: தமிழகத்தில் தாலிக்கு தங்க காசு மற்றும் திருமண நிதி உதவி தொகை வழங்காமல் முடக்கப்பட்டு வருவதால் ஏழை பெண்களின் திருமணம் தடைபடும் அவலம் தொடர்கிறது.  தமிழகத்தில் ஏழை எளிய பெண்கள், எந்த உதவியும் கிடைக்காதவர்கள், விதவை பெண்கள் மறுமணம் போன்றவற்றுக்காக பல்வேறு திட்டங்களை 30 ஆண்டிற்கு மேலாக தமிழக அரசு செய்து வருகிறது. உதவித்தொகையுடன், தங்க காசு வழங்கும் திட்டமும் சில ஆண்டாக நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் இரு வகையான திட்டங்களின் கீழ் உதவி வழங்கப்படுகிறது. திட்டம் 1ல் 10ம் வகுப்பு படித்த பெண்கள் (பழங்குடியினர் 5ம் வகுப்பு படித்தால் போதுமானாது), திட்டம் 2ல் பட்ட படிப்பு படித்த பெண்களுக்கு திருமணத்திற்காக உதவி வழங்கப்பட்டு வருகிறது. முதல் திட்டத்தில் 22 காரட் தரத்தில் 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது திட்டத்தில் 8 கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஏழை பெண்கள் அனைவரும் உதவி பெற முடியும். திருமணத்திற்கு முன் 40 நாளுக்கு முன் விண்ணப்பித்தால் போதுமானது. படிப்பு, வருமான சான்று சமர்ப்பித்தால் 15 நாளில் உதவித்தொகை, தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநில அளவில் அளவில் நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தில் உதவி கேட்டு சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இவர்களில் 1 லட்சம் பேருக்கு கூட உதவித்தொகை வழங்கப்படவில்லை.
நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் பல்வேறு காரணம் காட்டி 90 சதவீத விண்ணப்பங்களை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. உதவி பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வருவாய் வரம்பிற்குள் மாவட்ட அளவில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் வறுமை கோடு எல்லையில் வசிப்பவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வறுமை கோட்டு பட்டியலில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஏழை பெண்கள் இந்த திட்டத்தில் உதவி பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  பெரும்பாலான பெண்கள், திருமணம் முடிந்த பின்னரே உதவித்தொகை பெற்றனர். கொரோனா நோய் பரவல் காரணமாக விண்ணப்பங்கள் வருவது சற்று குறைந்திருந்தது. குறைந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து தாலிக்கு தங்கம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த மார்ச் இரண்டாவது வாரத்திற்கு பிறகு தாலிக்கு தங்கம் வழங்காமல் நிறுத்தப்பட்டதால் மக்கள் தவிப்படைந்தள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம் வாங்க இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் இதில் 70 ஆயிரம் பேருக்கு கூட இதுவரை இந்த திட்டத்தில் தங்க காசு வழங்கப்படவில்லை. இந்த திட்டத்திற்கு சுமார் 760 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. போதுமான நிதி ஒதுக்கப்படாத நிலையில் இந்த திட்டம் தள்ளாடி வருகிறது. கடந்த சில ஆண்டாக இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அளவை காட்டிலும் குறைந்த நபர்களுக்கே உதவி வழங்கப்பட்டு வருகிறது. தர்மாம்பாள் நினைவு மறுமண உதவி திட்டத்தில் 170 பேருக்கு மட்டுமே இலக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் 32 பேருக்கு மட்டுேம உதவி கிடைத்தது.

ஈவேரா மணியம்மையார் நினைவு விதவை திருமண உதவி திட்டத்தில் நடப்பாண்டில் 7,770 பேருக்கு இலக்கு வைக்கப்பட்டது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே உதவி பெற்றனர். அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டத்தில் 1,150 பேருக்கு இலக்கு வைக்கப்பட்டது. இதில் 500 பேர் கூட தங்க காசு உதவி பெறவில்லை. கடந்த 2019ம் ஆண்டில் இந்த திட்டத்தில் 634 ேபர் உதவி பெற்றனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டத்திலும் இதே நிலைதான். 2,450 பேருக்கு இலக்கு வைத்து அதில் 1,500 பேர் கூட உதவி பெறவில்லை. சமூக நலத்திட்ட உதவி பெறுபவர்கள் கூறுகையில், ‘‘8 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் ஏழை பெண்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது. நிதி நிலைமை முடங்கியதால் இந்த திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டார்கள். உதவிக்கான விண்ணப்பங்களையும் சாக்கு போக்கு சொல்லி முடக்கி வருகிறார்கள். இதனால் அதிருப்தி அதிகமாகிவிட்டது. முறையான நிதி ஒதுக்கீடு செய்தால் ஆண்டிற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை பெண்கள் இந்த திட்டத்தில் பயன் பெற்றிருக்க முடியும். ஆனால் பல ஆயிரம் பேர் இதில் பயன்பெற முடியவில்லை. ஏழை பெண்கள் திருமண உதவி கிடைக்காமல் கண்ணீர் விடும் அவலம் தொடர்கிறது’’ என்றனர்.

தங்க காசு டெண்டரில் மோசடி
தங்க காசு டெண்டர் விடுவது, ஒப்பந்தம் எடுப்பது போன்றவற்றில் கடந்த 4 ஆண்டாக குளறுபடி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் முன்னணி தங்க நகை நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்து தங்க காசு சப்ளை செய்வதாக தெரிகிறது. 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனத்திற்கு மட்டுமே டெண்டர் எடுக்க தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5க்கும் குறைவான மொத்த தங்க நகை நிறுவனம் மட்டுமே இந்த தகுதி அடிப்படையில் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. தங்க காசு விலை நிர்ணயம் செய்வதிலும் தில்லு முல்லு நிலவுகிறது. ஆண்டுதோறும் தங்க காசு டெண்டர் தொகை 20 முதல் 25 கோடி ரூபாய் அதிகமாகி வருகிறது. தங்க விலையின் சந்தை விலையை கணக்கில் எடுக்காமல் டெண்டர் விடப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags : grounds ,Tali , Indicating that the financial allocation is low, Rejection of several thousand woman in the gold for Thali project
× RELATED 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி:...