15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் பழங்குடியின வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஊட்டி: ஊட்டி அருகே 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்த பழங்குடியின இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீலகிரி  மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடி, வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர்  மாதன். இவரது மகன் ஈஸ்வரன் (24). பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர்.  ஈஸ்வரன் கடந்த 26.12.2018 அன்று இதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்தார். இது குறித்து  சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் காவல்  நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது  செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  இதில் 15 வயது பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதற்காக 3 ஆண்டும், 18  வயது பூர்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்தற்காக ஒரு ஆண்டும், பாலியல்  பலாத்காரம் செய்தற்காக 10 ஆண்டும் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற  நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க  வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செம்பக  மாலினி ஆஜரானார்.

Related Stories:

>