×

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நேற்று நடத்த உயர்மட்ட பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக குறைந்த அளவு அனுமதிக்கபடுகின்றனர். ஐயப்பன் கோவிலில் முன்பதிவு அடிப்படையில் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவசம்போர்டு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக திருவிதங்கூர் தேவஸ்தான தலைவர் கூறியதாவது: பக்தர்களின் வருகை குறைவால் வருமானம் குறைந்து விட்டதால் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தவித்து வருவதாகவும், பக்தர்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேநேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தேவஸ்தான அலுவலகத்தை போன் மூலமாகவும், கடிதங்கள், இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு தரிசனத்திற்கு அனுமதி கேட்டு வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடு தடை உத்தரவுகளை பின்பற்றி தனி மனித இடைவெளியுடன் தினசரி 10 ஆயிரம் பக்தர்களை சபரிமலை தரிசனத்திற்கு தாராளமாக அனுமதிக்கலாம் இவ்வாறு திருவிதங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு கூறியிருந்தார். இந்நிலையில் கேரள அரசின் தலைமை செயலாளர் விஸ்வாஸ்மேத்தா தலைமையில் உயர்மட்ட பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது. உயர்மட்ட பேச்சுவார்த்தை கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் தேவசம்போர்டு தலைவர் வாசு, ஆணையர் திருமேனி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. முதல்வர் பினராயி விஜயனுடனான ஆலோசனைக்கு பிறகு அனுமதிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படுகிறது. மேலும் கூடுதல் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Tags : meeting ,devotees ,Sabarimala Iyappan Temple , It was decided at the high level meeting to hold the number of devotees coming to Sabarimala Iyappan temple yesterday
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...