×

நிவர் புயல் கரை கடந்தபோது டெல்டாவில் சூறை காற்றுடன் மழை: விடிய விடிய மின்தடையால் மக்கள் அவதி

திருச்சி: நிவர் புயல் கரையை கடந்தபோது டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய சூறை காற்றுடன் மழை பெய்தது. கடல் ெகாந்தளிப்புடன் காணப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் விடிய விடிய தடைப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். நிவர் புயல் கரையை கடந்தபோது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. பலத்த காற்று வீசியது. நாகையில் புயலால் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தடை செய்யப்பட்ட மின்சாரம் நள்ளிரவு 12.30 மணிக்கு வந்தது. இதேபோல் மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு போன மின்சாரம் நேற்று காலை 9 மணி வரை வரவில்லை. அதன்பின்னரே வந்தது.

காரைக்காலில் பல இடங்களில் மரங்கள் அடியோடி விழுந்தது. நேற்று காலையும் மழை பெய்தது. தாழ்வான இடங்களில் உள்ள 180 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு மழை இல்லை. நேற்று காலை பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் உள்ள 50 ஆயிரம் மக்கள் 249 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது. மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. புயல் எச்சரிக்கையாக நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 78 முகாம்களில் 4,300 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கரூரில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை 5 மணி வரை லேசான சாரல் மழை பெய்தது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெரம்பலூரில் நேற்று முன்தினம் பகல் மற்றும் இரவில் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது. புயல் காரணமாக 139 குழந்தைகள் உள்பட 661 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரியலூரில் நேற்று முன்தினம் மதியத்திலிருந்து மழை பெய்தது. முன்னெச்சரிக்கையாக செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம், உள்பட 6 இடங்களில் 51 முகாம்களில் 499 குடும்பங்களை சேர்ந்த 2,225 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் நேற்று முன்தினம் பகல் 12 மணியிலிருந்து விட்டு விட்டு மழை பெய்த நிலையில், இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.

* 5,000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் நிவர் புயல் தாக்க கூடும் என அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களின் கிளைகள், வாழை, தென்னை மரங்களின் மட்டைகளையும் ஓரளவு வெட்டி பாதுகாத்தனர். இப்பகுதியில் 68.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சுமார் 23 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில்  நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பகுதி, சித்தமல்லி, பரப்பனாமேடு, பூவனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் இளம் நடவு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. பல இடங்களில் வடிகால் தூர் வாராமல்  மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. நேற்று காலை மழை பெய்யாததால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை படிப்படியாக வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

* ரூ.20 கோடி மீன்வர்த்தகம் பாதிப்பு
நிவர் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள 1500 விசைப்படகு மற்றும் 6 ஆயிரம் பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது. புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டும் நேற்று மாலை வரை மீன்பிடிக்க ஆழ்கடல் செல்ல மீன்வளத்துறை சார்பில் படகுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் 4ம் நாளாக தினமும் ரூ.4 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீன் சார்ந்த பிற தொழில்களும் முடங்கியதால் நேற்று வரைரூ.20 கோடி வர்த்தகம் முடங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Tags : Hurricane Delta ,coast ,Delta ,Hurricane Nivr ,Vidya Vidya , Hurricane rains in delta as Nivar storm makes landfall: People suffer from Vidya Vidya power outage
× RELATED கிடப்பில் போடப்பட்ட கிழக்கு கடற்கரை...