சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுக்க அதிமுகவினர் பணம் பதுக்கல்? சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கோரி மனு

மதுரை: சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் அக். 31ல் இறந்தார். இதன்பிறகு, கும்பகோணத்தில் உள்ள துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரது வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ரூ.800 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதேபோல், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக தலைமை அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கோடிக்கணக்கான ரூபாயை ரகசியமாக பதுக்கி வைத்திருப்பது தெரிகிறது. ஏற்கனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக ரூ.20ஐ டோக்கனாக கொடுத்த சம்பவம் நடந்தது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க உரிய வழிகாட்டுதல்கள் இல்லை. நீதிமன்றத்தால் மட்டுமே முறைகேடுகளை தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்க முடியும்.

கும்பகோணத்தில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.800 கோடி பதுக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நவம்பர் 16ல் இமெயில் மூலம் புகார் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கும்பகோணத்தில் அதிமுகவினர் பதுக்கிய ரூ.800 கோடி தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும், இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிவிக்கவும், நேர்மையான அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கவும், கும்பகோணத்தில் ரவுடிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories:

>