பாஜ எம்எல்ஏ.வுடன் செல்போனில் குதிரை பேரம் பங்களாவில் இருந்த லாலு மருத்துவமனைக்கு மாற்றம்: லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கும் பாய்ந்தது

பாட்னா: பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். நேற்று முன்தினம் பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத் யாதவ்,  ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள மருந்துவனையின் இயக்குனர் பங்களாவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்தபடியே, பாஜ எம்எல்ஏ லாலன் குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட லாலு, ‘சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தால், ஆட்சி கவிழ்ந்து விடும். ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி அளிக்கிறேன்,’ என பேரம் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக பாஜ அளித்த புகாரின் பேரில், லாலு மீது நேற்று பாட்னா லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதே நேரம், ராஞ்சி மருத்துவமனை பங்களாவில் சிகிச்சை பெற்று வந்த லாலு நேற்று, அதிரடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: