உடையும் அபாயத்தில் மணிமங்கலம் ஏரிக்கரை: 10 கிராம மக்கள் கடும் அச்சம்

ஸ்ரீபெரும்புதூர்: மணிமங்கலம் ஏரியின் மதகு அருகே உள்ள கரைப்பகுதி உடையும் அபாயத்தில் உள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் பகுதியில்1149 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரி மணிமங்கலம், கரசங்கால், வரதராஜபுரம், மலைபட்டு, சேத்துபட்டு தர்காஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. 10 மதகுகள், 3 கலங்கல் கொண்ட இந்த ஏரியில் கடந்த 2017ம் ஆண்டு குடிமராமத்து பணிகள் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இதையடுத்து கரை, மதகு, கலங்கல்கள் சீரமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் ஏரியில் தண்ணீர் நிரம்பியது. அப்போது, ஏரியின் 8வது மதகு அருகில் கரை சேதமாகி தண்ணீர் கசிந்து வெளியேறியது. இதை கண்ட அப்பகுதி விவசாயிகள், கசிவு பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். ஆனாலும் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதைதொடர்ந்து, கடந்த 2 மாதத்துக்கு முன் ஏரியின் 8வது மதகு, கரையை சீரமைத்தனர். ஆனால் கரையை முழுவதுமாக சீரமைக்கவில்லை. கரையை மழைநீர் அடித்து செல்லாத வகையில், அதனையொட்டி கருங்கற்கல் அமைக்க வேண்டும். ஆனால் அதையும் முறையாக செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில் மணிமங்கலம் ஏரி முழுமையாக நிரம்பி, கடல் போல் காட்சியளிக்கிறது. தற்போது ஏரியில் 8வது மதகையொட்டிய கரை சேதமாகி நீரில் அரித்து செல்லப்படுகிறது. ஏரி முழுவதும் நிரம்பி உள்ளதால், மணல் மூட்டைகளை அடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியில் மதகினை திறந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால், தொடர்ந்து மழை பெய்தால் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறி மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

* 2 நாட்களாக மின்தடை

நிவர் புயல் காரணமாக ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகா கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடியம் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான கிராமங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் காவல் நிலையம் அருகே மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் இப்பகுதியில் மின்சப்ளை நிறுத்தபட்டது. இதையடுத்து கரசங்கால் துணை மின்நிலைய ஊழியர்கள், கிரேன் மூலம் புதிய மின் கம்பங்களை மாற்றி அமைக்கின்றனர். மேலும் ஸ்ரீபெரும்புதூர் - முடிச்சூர் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 2 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

Related Stories: